Friday, October 19, 2012

அதிரை ரயில் நிலையத்தில் கடைசி நிமிடங்கள் (புகைபடங்கள் மற்றும் வீடியோ)


ரயில் பயணம் சுகமானது மட்டுமல்ல, மனதுக்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. பயணக்கட்டணம் குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பானதாகவும் இருப்பதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் விரும்புகின்றனர்.


1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் மாயவரம் முதல் காரைக்குடி வரை வழி தடத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அதிரை ரயில் நிலையம் பாரம்பரியமிக்க தொன்மையும் பழமையும் வாய்ந்ததாகும்.


கடற்கரையோரப் பகுதியில் அமைந்துள்ள இந்நிலையத்திலிருந்து அதிக எண்ணிக்கையைக் கொண்ட வர்த்தகர்கள், சபூராளிகள் என சென்னை மாநகரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் உற்பத்தியாகும் மீன், இறால், நண்டு, கருவாடு, உப்பு, தேங்காய் போன்ற விவசாயப் பொருட்களும் அதிகளவில் வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.



எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்நிலையத்தில் காலஞ்சென்ற ஐத்துரிஸ், அரக்கிடா போன்ற அப்பாக்களின் குதிரைவண்டிகள் முதல், சோட்டா, பக்கடா போன்ற பேராண்டிகளின் ஆட்டோக்கள் வரை புழங்கிய இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெற்கு ரயில்வேயில் மலைப்பாதை தவிர அகலப்பாதையாக மாற்றப்படாமல் உள்ள கடைசி மீட்டர்கேஜ் பாதையில் செல்லும் கடைசி ரயில் என்ற பெருமையை தட்டிச்செல்கின்றன வண்டி எண் 56893.

இன்று [18-10-2012] அதிரை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வழியனுப்பு விழாவில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயணிகளுக்கு இனிப்பு வழங்கி இறுதி ரயிலை கனத்த இதயத்துடன் வழியனுப்பிவைத்தனர்.

அதிரை ரயில் நிலையம் கடற்கரையோர பகுதியைக் கொண்டுருப்பதால் இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு  புதிய ரயில் நிலையம் அமைய வேண்டும் என்பதும், மேலும் தொலை தூரத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குரிய அனைத்து வசதிகளும் அமையபெற்றுள்ள நிலையமாக உருவாக்க வேண்டும் என்றும், அகல ரயில் பாதைக்கான பணிகள் எவ்வித குறிக்கீடுகள் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பதும் இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

சேக்கனா M. நிஜாம்

1 comment:

  1. மிக்க நன்றி 'அதிரை தண்டர்' தளத்திற்கு

    இறைவன் நாடினால் ! தொடரட்டும்...

    ReplyDelete