சென்னை : தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மழை தொடர்பான விபத்துகளில் 12 பேர் மரணமடைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்திற்கு அருகில் மையம் கொண்டுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், உள் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 8 சென்டிமீட்டரும், சென்னை நுங்கம்பாக்கத்திலும், வலங்கைமானிலும் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவானது.
நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனிடையே, நேற்று மட்டும் மழை தொடர்பான விபத்துகளில் 8 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில், மெட்ரோ ரயிலுக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து, அயனாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார். இதேபோல், வண்ணாரப்பேட்டையில், மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நின்னையூர் கிராமத்தில் மழைக்காக மரத்தின் கீழ் ஒதுங்கிய விவசாயி கோவிந்தன் என்பவர் மின்னல் தாக்கி உரிழந்தார். படுகாயமடைந்த மேலும் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விருதுநகர் மாவட்டம், பாறைப்பட்டியைச் சேர்ந்த தங்க முனீஸ்வரி, கண்ணன், ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் ஆகிய மூவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே தோளி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம், அய்யாக்கண்ணு ஆகியோர் மரத்திற்குக் கீழ் மழைக்காக ஒதுங்கி நின்ற போது மின்னல் தாக்கியதில் பலியாகினர். தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் மழை தொடர்பான விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது
0 comments:
Post a Comment