Saturday, October 20, 2012

புயலாக மாறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை?: 24 மணி நேரத்தில் கன மழை எச்சரிக்கை!


 Wet Office Forecast Very Heavy Rain
சென்னை: தமிழகத்தை ஒட்டி வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தமிழகத்தை நெருங்கி வந்து கொண்டிருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வங்க கடலில் நேற்று தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று மேற்கு நோக்கி நகர்ந்தது. அது தென்மேற்கு வங்க கடல் முதல் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் வரை நீடிக்கிறது. அதாவது இலங்கை, தமிழ்நாடு, ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் இன்று காலை முதல் நிலை கொண்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.

உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும்.

தற்போது இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை அருகே உள்ளது. அது அப்படியே மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அப்போது மன்னார் வளைகுடா பகுதியை கடந்துதான் கரைக்கு வரும். அந்த சமயத்தில் மிக பலத்த மழை பெய்யும்.

கடந்த கால பதிவுகளை வைத்து பார்க்கும்போது காற்றழுத்த தாழ்வு நிலையானது, மன்னார் வளைகுடா பகுதியில் கடக்கும் போதும், அந்த பகுதியில் நிலை கொண்டு நீடிக்கும் போதும் மிக, மிக பலத்த மழை பெய்துள்ளது. எனவே அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னையில் 2 நாட்களுக்கு விட்டு விட்டு மழை
சென்னையை பொறுத்த வரை 2 நாட்களுக்கு விட்டு, விட்டு மழை பெய்யும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
இன்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக மரக்காணத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. கல்பாக்கத்தில் 11 செ.மீ., கடலூரில் 8 செ.மீ., செங்கல்பட்டு, மகாபலிபுரம், சீர்காழியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

சிதம்பரம், சோழவரம், ராமேஸ்வரம், ராமநாதபுரத்தில் 6 செ.மீ., உத்தரமேரூர், கேளம்பாக்கம், திருத்துறைப்பூண்டி, திருச்செந்தூர், விருத்தாச்சலத்தில் 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 3 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

மரங்களுக்குக் கீழ் அண்டாதீர்கள்
மழை பெய்யும்போது திடீரென பயங்கர சத்தத்துடன் இடி தாக்குகிறது. இடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வெட்ட வெளியில் நிற்க கூடாது. ஒற்றை மரத்தின் கீழ் நிற்க கூடாது. நிறைய மரங்கள் இருந்து அதில் உயரமான மரத்தின் கீழும் நிற்க கூடாது. மழை பெய்யும்போது வீட்டில் இருப்பது நல்லது என்றார் அவர்.
அணைகள் நிரம்புகின்றன - மகிழ்ச்சியில் விவசாயிகள்
வட கிழக்குப் பருவ மழை எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக ஆரம்பித்திருப்பதால் தமிழகம் முழுவதும் அணைகளுக்கு நல்ல நீர்வரத்து கிடைத்துள்ளது. அணைகள் வேகமாக நிரம்ப ஆரம்பித்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிகிறது. மேலும் பியர்சோழா, வெள்ளி நீர்வீழ்ச்சி, செண்பகா அருவி, பேரிபால்ஸ், வட்டகாணல் அருவி, பாம்பார் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள குண்டேரி பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை, வரட்டுப்பள்ளம் போன்ற அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை பரவலாக லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழை கொட்டியது. நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மழை இல்லை. மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த 2 மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை காரணமாக வெப்பம் தணிந்து குளுமையான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. இதில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள உயரம் 136 அடி. தொடர்மழையினால் தற்போது 120.60 அடியாக நீர்மட்டம் உள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 41.47 அடி நீர் இருப்பு உள்ளது. சோத்துப்பாறை அணையின் மொத்த உயரம் 126.31 அடி. அங்கு தற்போது 101.02 அடி நீர் உள்ளது. 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையில், தொடர் மழையின் காரணமாக 44.60 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. பல இடங்களில் இரவிலும் மழை பெய்தது. குண்டாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வறண்டு கிடந்த குளங்களிலும் ஒரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, புள்ளம்பாடி பகுதியில் தலா 20 மி.மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் மொத்தம் 152மி.மீட்டர் மழை பெய்தது. இதேபோல் கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. ராமநாதபுரம், கமுதி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், பரமக்குடி, சத்திரக்குடி போன்ற பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, சிப்காட், காரைக்குடி, திருப்புவனம், மடப்புரம், இளையான்குடி, திருப்பத்தூர் பகுதியில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு மதுரை, திருமங்கலம், அவனியாபுரம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், சமயநல்லூர் போன்ற பகுதியில் மழை பெய்தது

0 comments:

Post a Comment