Tuesday, October 30, 2012

14 வருடம் சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆமிருக்கு திருமணம்: அருந்ததி ராய் உட்பட பல மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்பு!


aamir khan marriage

புது தில்லி:தன் இளமையின் பெரும் பகுதியை சிறையில் கழித்து இறுதியில் குற்றமற்ற அப்பாவி என்று விடுதலை செய்யப்பட்ட முஹம்மத் ஆமிர் கானுக்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய், இன்னொரு முக்கிய மனித உரிமைப் போராளியான ஷப்னம் ஹாஷ்மி, பத்திரிகையாளர் அஸீஸ் பர்னீ, வழக்கறிஞர் என்.டி. பஞ்சோலி, அரசியல்வாதிகள் ராம் விலாஸ் பாஸ்வான், முஹம்மத் அதீப் ஆகிய பிரபலங்களுடன், ஆமிரின் உறவினர்களும், நண்பர்களும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
14 வருட அநியாயச் சிறைவாச வேதனையை தன் முகத்தில் புதைத்து, வெற்றிகரமாக மறைத்து மலர்ந்த முகத்துடன், புன்சிரிப்புடன் ஆமிர் தனது திருமணத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.
முஹம்மத் ஆமிர் கானை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டோம். பயங்கரவாதி என்ற பயங்கரப் பட்டத்துடன் புது தில்லியின் ஆஸாத் சந்தைப் பகுதியில் தன் இல்லத்திற்கு அருகில் 1998 தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 18. உலகத்தைப் புரிந்து அப்பொழுதுதான் எட்டிப் பார்க்கும் வயது. 14 வருடங்கள் கழித்து சிறையிலிருந்து வெளிவரும்பொழுது அவர் 32 வயது முழு மனிதனாகியிருந்தார்.
உள்ளே பிடித்துச் செல்லும்பொழுது உயிரோடிருந்த தந்தை வெளிவரும்பொழுது உயிரோடில்லை. உள்ளே பிடித்துச் செல்லும்பொழுது ஒழுங்கான கை கால்களுடன் இருந்த அருமைத் தாய் வெளிரும்பொழுது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். தன் வீட்டு மொட்டை மாடியில் அன்றிரவு பதினான்கு வருடங்கள் கழித்து பால் நிலாவைப் பார்த்த கொடுமைக்குச் சொந்தக்காரர்தான் இந்த ‘ஆமிர். காராக்கிருகத்தின் கடும் இருள் செய்த கொடும் மாயம் இது.
எண்ணிப் பாருங்கள். 14 நாட்கள் சிறையில் கழிப்பவர்கள் 14 யுகங்கள் சிறையில் இருந்ததாக அங்கலாய்க்கும்பொழுது 14 மாதங்கள் அல்ல, மிக நீண்ட 14 வருடங்கள் சிறையில் கழித்தால் எத்தனை யுகங்களைக் கணக்கிட வேண்டும்?
1998ம் ஆண்டில் ஒரு கருப்பு இரவில் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்வதில் பெயர் போன டெல்லி போலீசார் ஆமிரைக் கைது செய்தனர். மூன்று மாநிலங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புப் படுத்தி இந்தக் கைது படலம் அரங்கேறியது.
ஒரு வழக்கல்ல, இரண்டு வழக்கல்ல, இருபது வழக்குகளை பால் வடியும் பதினெட்டு வயது ஆமிர் மீது போட்டார்கள் ஈவு இரக்கமற்ற டெல்லி போலீசார். அத்தனை வழக்குகளும் பொய்யென்று அப்பழுக்கற்றவராய் விடுவிக்கப்பட்டுள்ளார் ஆமிர்.
மொத்த சமுதாயமே உதறித் தள்ளிய வேளையில் மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி அவரை அரவணைத்து தன் டெல்லி அலுவலகத்தில் வேலை கொடுத்தார்.

0 comments:

Post a Comment