Thursday, October 25, 2012

6 நாள் போலீஸ் காவல் முடிந்தது- அதிரை தமீம் அன்சாரி மீண்டும் சிறையில் அடைப்பு


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 35). வெலிங்டன் ராணுவ முகாம், விசாகப்பட்டினம் கடற்படை தளம் உள்பட முக்கிய ராணுவ தளங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அவற்றை சி.டி.யாக தயாரித்து இலங்கை தூதரகத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி மூலம் கடத்த முயன்றதாக கடந்த செப்டம்பர் 18-ந்தேதி திருச்சி கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 


திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமீம் அன்சாரியை கியூ பிரிவு போலீசார் முதலில் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது தஞ்சையில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றினர். 



இதனை தொடர்ந்து அவரை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வேல்முருகன், தமீம் அன்சாரியிடம் போலீசார் அக்டோபர் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி விட்டு 24-ந்தேதி காலை 10 மணிக்கு திருச்சி ஜே.எம்-2 கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தவேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். 



கியூ பிரிவு போலீசார் கடந்த 18-ந்தேதி திருச்சி மத்திய சிறைக்கு சென்று கோர்ட்டு உத்தரவை காட்டி தமீம் அன் சாரியை வெளியே எடுத்து வந்தனர். 6 நாட்கள் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 



இந்திய ராணுவ ரகசியங்களை கடத்தியது தொடர்பாக தமீம்அன்சாரியிடம் இருந்து பல முக்கிய தகவல்களை சேகரித்து உள்ளதாக கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர். 



இதையடுத்து ஒரு நாள் முன்னதாகவே 23-ந்தேதி ஜே.எம்.-2 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ராஜாராமன் முன்னிலையில் கியூ பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் தமீம்அன்சாரியை அன்றே திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

0 comments:

Post a Comment