Sunday, October 14, 2012

தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்!


தொடர் மின்வெட்டு! - அதிகரிக்கும் மக்களின் போராட்டம்!

சென்னை:தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்து, அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ இன்றி பொதுமக்கள் தாங்களாகவே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் நிலை அதிகரித்து வருகிறது.  இப்போராட்டங்கள் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தினமும் 16 மணி நேர மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால்,அவதிப்பட்டு மக்கள், சில இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திருவள்ளூரில் நடந்த சாலை மறியலில், போலீசார் தடியடி நடத்தினர். வேலூர் மாவட்டம் மேலவிசாரத்தில்  நடந்த சாலை மறியல், வன்முறையாக மாறி, மின்சார அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 16 மணி நேரத்துக்கு மேலாக நிலவும் மின்வெட்டால், பல தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலையின்றி தவிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே மின்வெட்டை கண்டித்து, நேற்று இரவு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று முறை சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மி்ன்வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மின்வெட்டை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேனியில் மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உயர்நீதிமன்ற நீதிபதிக்கு  தந்தி
மின்வாரிய செயல்பாடுகளை முறைபடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தந்தி அனுப்பும் போராட்டம் கோவையில் நடந்தது. தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(டாக்ட்) சார்பில் நடந்த தந்தி அனுப்பும் போராட்டத்தில் சுமார் 100 பேர் பங்கேற்று தந்தி அனுப்பினர்.
“மின் வெட்டால், தினமும் 30 கோடி ரூபாய் வரை குறுந்தொழில்கள் மூலம் வருவாய் பெற்று நாங்கள், இன்று வெறும் மூன்று கோடிக்கு குறைவாகவே பெறுகிறோம். தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை; வாடகை, மின்கட்டணம் செலுத்த முடியவில்லை. குறைந்தபட்சம் எட்டு மணி நேர மின்சாரம் பெற்று தொழில் துறை தடையில்லாமல் இயங்கவும், எங்கள் பிரச்னைகளை பொது வழக்காக எடுத்து தீர்வு அளித்திட  நீதிபதி  அவர்கள் முன்வர வேண்டும்.” என்று அத்தந்தியில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பகலில் நடைமுறையில் இருக்கும் மின்வெட்டை சமாளித்துவிடும் பொதுமக்கள், இரவு நேரங்களிலும் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால்தான் வீதிக்கு வந்து போராடுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நெய்வேலியில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் பிற மாநிலங்களுக்கு அனுப்பாமல், இப்போதைக்கு தமிழகத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போதைய மின்வெட்டையும் காலவரையறை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர தேவையான உபகரண வசதியை மேம்படுத்த வேண்டும். மின்வெட்டு பிரச்னையில் தமிழக முதல்வர் இனியும் மவுனம் சாதிக்காமல் தீர்வு காண முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை  விடுத்து வருகின்றனர்

1 comment:

  1. தமிழக அரசு என்ன செய்கிறது?

    ReplyDelete