Monday, October 15, 2012

அபிஜித் முகர்ஜி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி : SDPI, WPI கட்சிகளுக்கு 70,000 ஒட்டுகள்!

sdpi and wpi

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜாங்கிப்பூர் மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட புதிய கட்சிகளான சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற SDPI யும், ஜமாஅத்தே இஸ்லாமியின் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவும் கிட்டத்தட்ட 70,000 ஓட்டுகள் வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜாங்கிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டதால் தான் வகித்து வந்த நிதி அமைச்சர் பதவியையும், ஜாங்கிப்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதிக்கு கடந்த அக்டோபர் 10 அன்று இடைத்தேர்தல் நடைபெற்று, 13 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி போட்டியிட்டார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரசுடன் உறவை முறித்துக் கொண்டாலும் இந்த இடைத்தேர்தலில் அபிஜித் முகர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று முன்பே அறிவித்துவிட்டது.
அபிஜித் முகர்ஜி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முஸாஃபர் ஹுசைனை விட வெறும் 2,536 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதே தொகுதியில் பிரணாப் முகர்ஜி கடந்த தேர்தலில் 1 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா நான்காவது இடத்தையும், சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற SDPI ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
மொத்தம் 8,47, 872 வாக்குகள் பதிவாயின. அபிஜித் முகர்ஜி 3,32, 919 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை நெருக்கமாகப் பின்தொடர்ந்து வந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முஸாஃபர் ஹுசைன் 3,30,383 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 85,887 வாக்குகளை பா.ஜ.க. வேட்பாளர் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் போட்டியிட்ட டாக்டர் ரெய்ஸுத்தீன் வாசா 41,620 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் போட்டியிட்ட தாஹிதுல் இஸ்லாம் 24,654 வாக்குகள் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் நலனுக்காகத் துவக்கப்பட்டுள்ள கட்சிகளான வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவும், சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவும் முதன் முதலாகப் போட்டியிடும் இந்த இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகள் வாங்கியிருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. 2013ல் நடைபெறவிருக்கும்  பஞ்சாயத்துத்  தேர்தலில் இந்த இரு கட்சிகளும் கணிசமான வாக்குகள் பெற்று நிறைய இடங்களில் வெற்றி பெறும் என்று  அந்த இரு கட்சிகளின் வேட்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்

0 comments:

Post a Comment