Friday, October 5, 2012

கூடங்குளம்: அணு விபத்து ஏற்பட்டால் பொறுப்பாளி யார்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

Who is responsible in the event of a nuclear accident - SC

புதுடெல்லி:கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக சமூக சேவகர் ஜி. சுந்தர்ராஜன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று அந்த மனுவைப் பரிசீலனை செய்யும்பொழுது உச்சநீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியது.
விபத்து குறித்து விவரமான பதில் விளக்கம் தரவேண்டும் என்று நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரடங்கிய பெஞ்ச் மத்திய அரசைக் கேட்டுள்ளது.
2010 அணுப் பாதுகாப்புச் சட்டப்படி விபத்து நடந்தால் இழப்பீடாக 1500 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும், ஆனால் 1989ல் கூடங்குளம் அணுமின் திட்டம் ஒப்பந்தம் கையெழுத்தானதால் இந்தச் சட்டத்திலிருந்து அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் மனுதாரருக்காக ஆஜராகிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது வாதத்தில் கூறினார்.  மேலும் விபத்து ஏற்பட்டால் யார் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று எந்தத் தெளிவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
விபத்து நேரிடின் அரசு தானே அதற்கான தொகையைக் கொடுக்க வேண்டும், அது அரசுக் கருவூலத்திற்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துமல்லவா என்று நீதிமன்றம் வினவியது. 2010 அணுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து கூடங்குளத்தை விலக்கியதற்கான காரணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கேட்டுக்கொண்டது.
1989ல் தெளிவில்லாத அனுமதி மட்டுமே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளிக்கப்பட்டிருந்தது என்றும், அணு எரிபொருள், அணுமின் நிலைய எல்லை சம்பந்தப்பட்ட எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும் வழக்கிறிஞர் பிரசாந்த் பூஷன் கூறினார்.
அணுமின் நிலைய உற்பத்திகள் உடனே துவக்கப்படும் என்று வெளிவந்துள்ள பத்திரிகைச் செய்திகளின் நகல்களை பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அரசுத் தரப்பு வாதம் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் எப்படி அணுமின் உற்பத்திகளைத் துவக்க முடியும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஜல சத்தியாக்கிரகம் போன்ற பெரும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெறும் நிலையில் அணுமின் நிலைய உற்பத்திகளை உடனே துவங்குவது எளிதான காரியமில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த வழக்கின் தொடர்ச்சியான வாதத்தை அடுத்த வியாழக்கிழமை நீதிமன்றம் கேட்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுமின் நிலையத்திற்காக செலவு செய்த பணம் முக்கியமில்லை, அங்கே மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும், உரிய பாதுகாப்பு இல்லையென்றால் மின் நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடும் என்று சென்ற வாரம் உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்து கறாறாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment