Wednesday, October 31, 2012

நீரில் மூழ்கும் பிலால் நகர்: நேரடி ரிப்போர்ட் (photos)

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக எரிப்புறக்கரை பஞ்சாயத்திற்குட்பட்ட பிலால் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிரை தண்டர் குழுவினர்  எடுத்த புகைப்படங்கள்.

                                      செடியன் குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீர்

ஏற்கனவே இருந்த வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால் செடியன் குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீர்  பிலால் நகரை சூழ்ந்து  வீடுகளுக்குள்ளும் புகுந்து விட்டது. மழை அதிகரித்து குளம் நிரம்பும் போது நிலைமை இன்னும் மோசமாகும்.

                 வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிடும் SDPI கட்சியினர்
                        வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் SDPI கட்சியினர்


பொய்ப் பிரச்சாரங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்த பாப்புலர் ஃப்ரண்டின் சமநீதி மாநாடு!

பாப்புலர் ஃப்ரண்டின் சமநீதி மாநாடு!ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்
கோழிக்கோடு:நவீன சமூக இயக்க சக்தியின் வளர்ச்சியை பொய்ப் பிரச்சாரங்களின் மணல் கோட்டையை கட்டி தடுக்க முடியாது என்ற பிரகடனத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு கோழிக்கோடு கடற்கரையில் புதிய வரலாற்றை எழுதியது.
வளர்ச்சி, சீர்திருத்தம், சுதந்திரம், நம்பிக்கை ஆகியவற்றை பிரதிபலிக்கும் மூவர்ண கொடியை ஏந்தியவாறு கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதூறு பிரச்சாரங்களுக்கு தங்களது எதிர்ப்புணர்வை பறைசாற்றினர்.
பயம், கோழைத்தனம் இவற்றையெல்லாம் கடலில் தூக்கி வீசிவிட்டு தனது லட்சிய பயணத்தை துவக்கிய மாபெரும் இயக்கத்தை போலீஸ்-ஊடக-அரசு இயந்திரங்களின் மிரட்டல்களாலும், வேட்டையாடல்களாலும் தகர்க்க முடியாது என்ற பிரகடனத்திற்கு மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளம் சாட்சியம் வகித்தது.
தனியார் பேருந்து வேலை நிறுத்தம், மழை உள்ளிட்ட இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் மாநாட்டில் வீராவேசத்துடன் கலந்துகொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் போராட்ட வீரியத்தின் முன்மாதிரிகளாக மாறினர். பெருந்திரளான பெண்களும் குழந்தைகளுடன் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மாலை நான்கரை மணிக்கு மாநாடு துவங்க சில மணிநேரங்களுக்கு முன்பாகவே கடற்கரை திடலில் மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களின் பின்னணியை வெளிச்சம் போட்டு காட்டி அரசு, அதிகார, ஊடக, காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றின் பொய் முகங்களை தோலுரித்து காட்டும் விதமாக ஒரு மாத காலமாக தேசிய அளவில் நடந்து வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் நடந்த சமநீதி மாநாட்டின் 2- வது நிகழ்ச்சிதான் கோழிக்கோட்டில் நேற்று நடந்தேறியது.
சமநீதி மாநாட்டை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் மவ்லானா உஸ்மான் பேக் துவக்கிவைத்தார். மாநில தலைவர் மெளலவி அஷ்ரஃப் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் பொருளாளர் மவ்லானா முஹம்மது ஈஸா, தெற்கு கேரளா ஜம்மியத்துல் உலமாவின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் வி.எம்.ஃபத்தஹுத்தீன் ரஷாதி, பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.கோயா, மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீத், பகுஜன் சமாஜ் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நன்மண்டா, கேரள காங்கிரஸ்(பி) மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், மனித உரிமை ஆர்வலர் எ.வாசு, தேசிய பெண்கள் முன்னணி மாநில செயலாளர் பி.கே.ரம்லா, அஷ்ரஃப், நிகழ்ச்சி கன்வீனர் கே.ஸாதாத் ஆகியோர் உரை நிகழ்த்தினர். பி.டி.ஏ.ரஹீம் எம்.எல்.ஏவின் உரை மாநாட்டில் வாசிக்கப்பட்டது.
இம்மாநாடு இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. வெளிநாடுகளில் வாழ்வோர் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் இணையதளம் வழியாக கண்டுள்ளனர்.

ஹாஜிகளுக்கு IFF தன்னார்வத் தொண்டர்களின் அபார சேவை!


IFF Wheel Chair assistance-Mina-2012
மக்கா:IFF என்னும் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் வருடா வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஹாஜிகளுக்கு தன்னலமற்ற தொண்டுகள் பல ஆற்றி வருகின்றது. இந்த வருடமும் அவர்களின் சேவை அபாரமாக இருந்தது. IFF தன்னார்வத் தொண்டர்கள் அரஃபாவிலும், முஸ்தலிபாவிலும், கூடார நகரமான மினாவிலும் பெரு வெள்ளமாகத் திரண்டு சென்ற ஹாஜிகளுக்கு இடைவிடாது சேவைகள் செய்தனர். இது ஹாஜிகளுக்கு மிகுந்த உதவியாகவும், நிவாரணமாகவும் இருந்தது.
குறிப்பாக கூடார நகரமான மினாவில் IFF தன்னார்வத் தொண்டர்களின் சேவை தனித்துவமிக்கதாக இருந்தது.
ஏற்கனவே மக்காவிலிருந்து மினாவிற்கு வந்து சேர்ந்த ஹாஜிகளுக்கு அவர்களின் கூடாரங்களுக்குச் சென்று சேர உதவி புரியும் வகையில் துல்ஹஜ் ஏழாம் நாள் அன்றே IFF தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் சேவைகளைத் தொடங்கினர்.
பின்பு துல்ஹஜ் எட்டாம் நாள் துவங்கி ஹாஜிகள் அரஃபாவிற்குச் சென்று சேர தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.
இது ஒரு புறம் இருக்க, IFF தன்னார்வத் தொண்டர்கள் அனைத்து இரயில்வே நிலையங்களிலும் ஹாஜிகள் அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட இரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கும் உதவிகள் புரிந்தனர்.
குறிப்பாக வயோதிகளுக்கும், பலவீனமானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் IFF தன்னார்வத் தொண்டர்கள் செய்தனர். மேலும் முஸ்தலிபாவிலிருந்து மினாவிற்குத் திரும்பும் சமயத்தில் பல ஹாஜிகளுக்கு சக்கர நாற்காலிகளின் மூலமும் தங்களின் உதவிகளை வழங்கினர்.
“இந்தச் சேவைகள் ஏனோதானோவென்று வழங்கப்படுவது இல்லை. போதுமான பயிற்சியுடனும், நன்கு தயார் செய்யப்பட ஒருங்கிணைப்புடனும் கூடிய திட்டம் இருந்தால் மட்டுமே மேற்கூறப்பட்ட அனைத்து சேவைகளும் சாத்தியப்படும்” எனக் கூறினார் ஹஜ் சேவை ஒருங்கிணப்பாளர் இக்பால்.
இவரது சீரான ஒருங்கிணைப்பிலும், IFFன் தலைவர் அஷ்ரஃப் மோராயூர் அவர்களின் வழிகாட்டுதலிலும் இந்தச் சேவைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
மினாவில் பல வருடங்கள் ஹாஜிகளுக்குச் சேவை செய்த அனுபத்தின் அடிப்படையில் IFF முழுமையான வரைபடம் ஒன்றை மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் தயாரித்து, ஹாஜிகளுக்கு வழங்கியது.
கூடாரத்தை எளிதில் கண்டுபிடிக்கவும், வழி தவறிய ஹாஜிகள் தங்கள் கூடாரங்களுக்கு மிக எளிதாகத் திரும்பி வரவும் எளிதான தோற்றம் கொண்ட இந்த வரைபடம் மிகவும் பயனுள்ளதாகவும், உதவிகரமாகவும் இருந்ததாக ஹாஜிகள் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்

இஸ்லாம் எனக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தந்தது: இஸ்லாத்தை தழுவிய முன்னாள் நடன மங்கை ஹீதர் மாத்யூஸ்!



islam is the solution
லண்டன்:அரைக்குறை ஆடையுடன் இரவு விடுதிகளில் நடனமாடிய பிரிட்டனைச் சார்ந்த ஹீதர் மாத்யூஸ் என்ற 27 வயது பெண்மணி, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பின் அதன் மூலம் கிடைத்துவரும் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இதுவரை கிடைக்காத மகிழ்ச்சியும், பாதுகாப்பும், அன்பும் முஸ்லிமாக மாறி பர்தா அணிந்து தலையை மறைக்க துவங்கியவுடன் கிடைப்பதாக பிரிஸ்டன் நகரைச் சார்ந்த மாத்யூஸ் கூறுகிறார். 2 பெண் குழந்தைகளுக்கு அன்னையான ஹீதர் மாத்யூஸ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்லாத்தை தழுவியிருந்தார்.
முன்னர் மாத்யூஸின் கணவர் இஸ்லாத்தை தழுவியிருந்தார். இதனைத் தொடர்ந்து தனது கணவரை எதிர்ப்பதற்காக குறைகளை கண்டுபிடிக்கும் நோக்கில் இஸ்லாத்தை ஆராயத் துவங்கினார். கடந்த ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இருப்பினும், ஹீதர் மாத்யூஸ் தனது ஆய்வை தொடர்ந்தார். குறைகளை ஆராயத்துவங்கிய ஹீதர் மாத்யூஸின் உள்ளத்தில் இறைவன் ஹிதாயத் என்னும் நேர்வழியை விதைத்தான். விளைவு, தனது பாவக்கறைகளை கழுவிவிட்டு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்கும் முடிவுக்கு வந்தார் அவர்.
பின்னர் அருகிலுள்ள மஸ்ஜிதின் இமாமை இஸ்லாத்தை தழுவ அணுகினார். தனது பிள்ளைகளை இஸ்லாத்தை தழுவ நிர்பந்திக்கமாட்டேன் என்று ஹீதர் மாத்யூஸ் கூறுகிறார். அவர்கள் இஸ்லாத்தை படித்து ஆய்வு செய்த பிறகு வரட்டும் என்பது மாத்யூஸின் நிலைப்பாடு. ஆபாசமான தனது முந்தைய புகைப்படங்களை காணும்பொழுது வெட்கம் தோன்றியதாக கூறும் ஹீதர் மாத்யூஸ் மேலும் கூறியது:”பிறருக்கு வெறுப்பை தூண்டும் ஆடைகளை அணியாதீர்கள். குறிப்பாக ஆண்களை தவறான வழியில் சிந்திக்க தூண்டும் வாய்ப்பை பெண்கள், அவர்கள் அணியும் ஆடை மூலமாக அளித்துவிடக்கூடாது.
இஸ்லாம் பாதுகாப்பான ஆடையை அணிய சொல்கிறது. பைத்தியக்காரத்தனமான உணர்வு அல்ல. அன்புதான் முக்கியம் என்பதை இஸ்லாம் எனக்கு கற்பித்தது.” இவ்வாறு ஹீதர் மாத்யூஸ் கூறியுள்ளார். அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அடங்கிய ஃபைத் மேட்டர்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஹீதர் மாத்யூஸ் போன்ற இஸ்லாத்தை தழுவியவர்கள் குறித்தும், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கான காரணங்கள் குறித்தும் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இதில் 3-ல் 2 பேர் 27 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் ஆவர்

Tuesday, October 30, 2012

ஹஜ் பெருநாளை முன்னிட்டு குவைத் இந்தியா ஃபிராடர்நிட்டி ஃபாரம் (KIFF) நடத்திய விளையாட்டு நிகழ்ச்சி.

குவைத்: ஹஜ் பெருநாளை முன்னிட்டு குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃபிராடர்நிட்டி ஃபாரம் (KIFF) சார்பாக விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பெருநாள் தினத்தன்று மதியம் சரியாக 2 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்வில் கால்பந்தாட்டம், கபடி, கைபந்து போட்டி, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான போட்டிகள் என பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 

இறுதியாக முதலிடம் பிடித்தவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கும் கோப்பைகளும், பதகங்களும் வழங்கப்பட்டன.  அப்பாஸிய, பர்வனியா, பாஹீல், சிட்டி அணிகள் கபடி, கைபந்து, கயிறு இழுத்தல் போட்டிகளில் கலந்து கொண்டன. 

சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற போட்டிகளின் இறுதியில் அப்பாஸிய அணி பட்டத்தை தட்டி சென்றது, இரண்டாம் இடத்தை சிட்டி அணி கைப்பற்றியது. போட்டியில் வென்றவர்களுக்கு இறுதியில் KIFF-ன் தலைவர் சகோ.அப்துல் சலாம் அவர்கள் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கி கவுரவித்தார். 

மொத்த நிகழ்ச்சியையும் சகோ. ஷிஹாப் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். KIFF-ன் தன்னார்வ தொண்டர்கள் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Inline image 1
KIFF- ன் தமிழ் பிரிவு தலைவர் சகோ.அம்ஜத் அலி ஆற்றிய உரையின் போது எடுத்த படம்.
Inline image 2
KIFF-ன் வீரர்கள் நடத்திய அணிவகுப்பு நிகழ்ச்சி. 
Inline image 3
நிகழ்ச்சியின் இடையே நடைபெற்ற தொழுகையின் போது எடுத்த படம்.
Inline image 4
வெற்றி பெற்ற அணியான அப்பாஸிய அணியின் வீரர்கள் கோப்பையுடன்.
Inline image 5
இரண்டாம் இடம் பிடித்த சிட்டி அணியினர் கோப்பையுடன்.

ரிஹாப் மூலம் 25 ஆயிரம் குடும்பத்தினருக்கு குர்பானி இறைச்சி விநியோகம்!


rehab qurbani distribution
புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்தது குர்பானி இறைச்சி. தேச முழுவதும் ஈதுல் அழ்ஹா என்று அழைக்கப்படும் தியாகத்திருநாளில் குர்பானி கொடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இறைச்சிகள் அடங்கிய பொட்டலங்களை ரிஹாப் இந்தியா பவுண்டேசன் விநியோகித்தது.
அஸ்ஸாம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்போர் உள்பட மேற்கு வங்காளம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 25 ஆயிரம் குடும்பத்தினருக்கும் தியாகப்பெருநாளில் அறுக்கப்பட்ட குர்பானி இறைச்சிப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக ரிஹாப் பவுண்டேசனின் பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக 2-வது வருடமாக ரிஹாப் , தியாகப்பெருநாளில் அறுக்கப்படும் குர்பானி இறைச்சியை விநியோகித்துள்ளது. இத்திட்டத்திற்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் பொட்டலங்களை உரிய நேரத்தில் விநியோகித்த தன்னார்வ தொண்டர்கள் ஆகியோருக்கு ரிஹாப் இந்தியா பவுண்டேசன் தலைவர் இ.அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.




5,650 கி.மீ கால் நடையாக பயணம் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய போஸ்னியா குடிமகன்!



senad hadich
ஜித்தா:47 வயதான போஸ்னியா குடிமகன் ஸைனாத் ஹாடிச் இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற 5,650 கி.மீ கால் நடையாக பிராயணம் செய்துள்ளார். நவீன போக்குவரத்து வசதிகள் அதிகரித்துள்ள இக்காலக்கட்டத்தில் கால் நடையாக பயணித்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஸைனாதை குறித்த செய்திகளை போஸ்னியா நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஹஜ்ஜின் கிரியையகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு மக்காவை அடைந்த ஸைனாத், தனது கால் நடை பிரயாணத்தை கடந்த டிசம்பர் மாதம் துவக்கியுள்ளார். 314 நாட்கள் நீண்ட இப்பிரயாணத்தில் பெரிய அளவிலான சிக்கல்கள் எதுவும் சந்திக்கவில்லை என்று போஸ்னியா பத்திரிகைளுக்கு அளித்த பேட்டியில் ஸைனாத் கூறியுள்ளார். வடகிழக்கு போஸ்னியாவில் பனோவிச்சி நகரத்தில் இருந்து ஸைனாத் தனது புனித யாத்திரையை துவக்கினார்.
200 யூரோ கரன்சியும், 20 கிலோ எடையுள்ள அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே ஸைனாத் தனது பயணத்தில் எடுத்து வந்துள்ளார். செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகள் வழியாக இவரது புனிதப் பயணம் அமைந்தது. டிசம்பர் மாதம் பல்கேரியாவில் கடுமையான குளிர் நிலவியது. அவ்வேளைகளில் அந்நாட்டின் வீதிகள் வழியாக நடந்தது மிகுந்த சவாலாக அமைந்தது என்று ஸைனாத் கூறினார். சிரியாவில் மிகுந்த சிரமங்களை ஸைனாத் சந்திக்க வேண்டியிருந்தது.
மக்கள் புரட்சி உள்நாட்டு கலவரமாக மாறிய பஸ்ஸாருல் ஆஸாதின் சர்வாதிகார அரசு ஆளும் நாட்டில் அரசு தரப்பினர் மற்றும் புரட்சி படையினர் ஆகியோரிடமிருந்து ஒரே போலவே மரியாதைக்குறைவான வார்த்தைகளை கேட்க நேர்ந்தது. உயிருடன் மக்காவை சென்று அடைந்தால் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறு சிரியாவின் கலவர பூமியில் ராணுவ வீரர் ஒருவர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக ஸைனாத் கூறுகிறார்

14 வருடம் சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆமிருக்கு திருமணம்: அருந்ததி ராய் உட்பட பல மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்பு!


aamir khan marriage
புது தில்லி:தன் இளமையின் பெரும் பகுதியை சிறையில் கழித்து இறுதியில் குற்றமற்ற அப்பாவி என்று விடுதலை செய்யப்பட்ட முஹம்மத் ஆமிர் கானுக்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய், இன்னொரு முக்கிய மனித உரிமைப் போராளியான ஷப்னம் ஹாஷ்மி, பத்திரிகையாளர் அஸீஸ் பர்னீ, வழக்கறிஞர் என்.டி. பஞ்சோலி, அரசியல்வாதிகள் ராம் விலாஸ் பாஸ்வான், முஹம்மத் அதீப் ஆகிய பிரபலங்களுடன், ஆமிரின் உறவினர்களும், நண்பர்களும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
14 வருட அநியாயச் சிறைவாச வேதனையை தன் முகத்தில் புதைத்து, வெற்றிகரமாக மறைத்து மலர்ந்த முகத்துடன், புன்சிரிப்புடன் ஆமிர் தனது திருமணத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.
முஹம்மத் ஆமிர் கானை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டோம். பயங்கரவாதி என்ற பயங்கரப் பட்டத்துடன் புது தில்லியின் ஆஸாத் சந்தைப் பகுதியில் தன் இல்லத்திற்கு அருகில் 1998 தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 18. உலகத்தைப் புரிந்து அப்பொழுதுதான் எட்டிப் பார்க்கும் வயது. 14 வருடங்கள் கழித்து சிறையிலிருந்து வெளிவரும்பொழுது அவர் 32 வயது முழு மனிதனாகியிருந்தார்.
உள்ளே பிடித்துச் செல்லும்பொழுது உயிரோடிருந்த தந்தை வெளிவரும்பொழுது உயிரோடில்லை. உள்ளே பிடித்துச் செல்லும்பொழுது ஒழுங்கான கை கால்களுடன் இருந்த அருமைத் தாய் வெளிரும்பொழுது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். தன் வீட்டு மொட்டை மாடியில் அன்றிரவு பதினான்கு வருடங்கள் கழித்து பால் நிலாவைப் பார்த்த கொடுமைக்குச் சொந்தக்காரர்தான் இந்த ‘ஆமிர். காராக்கிருகத்தின் கடும் இருள் செய்த கொடும் மாயம் இது.
எண்ணிப் பாருங்கள். 14 நாட்கள் சிறையில் கழிப்பவர்கள் 14 யுகங்கள் சிறையில் இருந்ததாக அங்கலாய்க்கும்பொழுது 14 மாதங்கள் அல்ல, மிக நீண்ட 14 வருடங்கள் சிறையில் கழித்தால் எத்தனை யுகங்களைக் கணக்கிட வேண்டும்?
1998ம் ஆண்டில் ஒரு கருப்பு இரவில் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்வதில் பெயர் போன டெல்லி போலீசார் ஆமிரைக் கைது செய்தனர். மூன்று மாநிலங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புப் படுத்தி இந்தக் கைது படலம் அரங்கேறியது.
ஒரு வழக்கல்ல, இரண்டு வழக்கல்ல, இருபது வழக்குகளை பால் வடியும் பதினெட்டு வயது ஆமிர் மீது போட்டார்கள் ஈவு இரக்கமற்ற டெல்லி போலீசார். அத்தனை வழக்குகளும் பொய்யென்று அப்பழுக்கற்றவராய் விடுவிக்கப்பட்டுள்ளார் ஆமிர்.
மொத்த சமுதாயமே உதறித் தள்ளிய வேளையில் மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி அவரை அரவணைத்து தன் டெல்லி அலுவலகத்தில் வேலை கொடுத்தார்.

Monday, October 29, 2012

அணுவுலை வேண்டாம்: தடையை மீறி தமிழக சட்டசபை முற்றுகையிட படுமா?


koodangulam
சென்னை:திட்டமிட்டபடி தமிழக சட்டசபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்த உள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அறிவித்துள்ளார். இப்போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சி இந்த போராட்டத்தில் பங்கெடுக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவை, உடனடியாக விலக்கி கொள்ளவேண்டும் போராட்டக்காரர்கள் மீதான எல்லா வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று அணு உலையை மூட வேண்டும்-என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் நாளை மறுநாள் (29.10.2012) சட்ட மன்ற முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்கும். பொதுமக்களும், அறிவுஜீவிகளும், மாணவர்களும், வியாபாரிகளும், சமூக நல அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் நமது எதிர்கால தலைமுறையின் நலன் கருதி நாளை மறுதினம் நடைபெற உள்ள சட்ட மன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்குமாறும், ஆதரவு தந்து இப்போராட்டத்தினை வெற்றி பெற செய்யுமாரும் கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி சென்னையில் சட்டசபை கட்டிடத்தை முற்றுகையிட்டு அக்டோபர் 29-ம் தேதி (இன்று) பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்து இருந்தனர். இந்த முற்றுகையில், அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சியினரும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய உதயகுமார், “அறவழியில் நடத்த இருக்கும் எங்கள் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். எல்லாவற்றையும் சமாளித்து திட்டமிட்டபடி நாங்கள் அறிவித்த போராட்டம் சென்னையில் நடைபெறும். எங்கள் போராட்டத்தை ஆதரிக்கும் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தி முடிப்போம்”என்றார்.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக உவரி, பெரியதாழை, கூத்தங்குழி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து மீனவ மக்கள் சென்னைக்கு சென்றுள்ளனர். மொத்தமாக பஸ் அமர்த்தி சென்றால், போலீசாரால் திருப்பி அனுப்பப்படலாம் என்பதால் தனித்தனியாக பிரிந்து கூடங்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
இடிந்தகரை, கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சென்றுள்ளார்களா? என்பது தெரியவில்லை.
சென்னை சென்றால் கைது செய்யப்படலாம் என்பதால் உதயகுமார் மற்றும் போராட்டக் குழுவைச் சேர்ந்த புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டவர்கள் கூத்தங்குழி கிராமத்திலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Sunday, October 28, 2012

இந்தியா முழுவதும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்: கஷ்மீரில் அமைதி

Eid al-Adha celebrations underway in India
புதுடெல்லி:ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நாடு முழுவதும் நேற்று (27.10.12) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முஸ்லிம்கள் ஈத்காஹ் திடல்களிலும், மஸ்ஜித்களிலும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றினர். பின்னர் பரஸ்பரம் ஈத் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டனர். அறுசுவை உணவுகள் உண்டு மகிழ்ந்தனர். தன் அருமை மகனையே இறைவனின் கட்டளைக்கேற்ப அறுத்துப் பலியிட முன்வந்த இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக ஆடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும் அறுத்துப் பலியிட்டனர்.
பக்ரீத் என்றழைக்கப்படும் இந்தத் திருநாளில் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனை புரிந்தனர்.
பழைய டெல்லியில் பாரம்பரியமிக்க உணவுகளான கபாப், பிரியாணி, நிஹாரி, கொர்மா ஆகிய உணவுகளுடன் பெருநாள் களை கட்டியது. அங்குள்ள தெருக்களிலும், சந்துகளிலும் இவை தயாரிக்கப்பட்ட மணம் எங்கும் பரவி நின்றது.
துப்ரி மாவட்டம், அஸ்ஸாம்:
கடந்த புதன்கிழமை இந்த மாவட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலினால் பதட்டம் நிலவியது. இதனால் பலத்த பாதுகாப்புக்கிடையில் பெருநாள் தொழுகைகளை முஸ்லிம்கள் நிறைவேற்றினர்.
லக்னோ, உ.பி:
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஃபைஸாபாத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையில் ஈத் தொழுகைகள் நிறைவேற்றப்பட்டன.
ஜம்மு கஷ்மீர்:
ஜம்மு கஷ்மீரில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் பெருநாள் தினம் அமைதியாகக் கழிந்தது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்திலும், ஏரலிலும் குர்பானீக்காக வந்த ஒட்டகங்கள் அனைவரையும் கவர்ந்தன

Saturday, October 27, 2012

அதிரை அருகே ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பிஜேபி யினர் தடை

அதிரை அருகில் உள்ள வெட்டிகாடு என்ற கிராமத்தில் பல இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள்.  இன்று ஹஜ் பெருநாள் என்பதால் அவர்கள் பள்ளிவாசலில்  தக்பீர்  முழங்கி கொண்டு இருந்த போது அந்த  ஊரில் உள்ள பாரதிய ஜனதா  கட்சியினர் பள்ளிவாசல் அருகில் கோயில் இருப்பதால் தக்பீர் மற்றும் தொழுவதற்கு தடை போட்டுள்ளனர்.இதனால் அங்கு  இருவர்களுக்கு இடையே    வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.இதனை தகவல் அறிந்த  20 க்கு மேற்பட்ட நமதூர் SDPI சகோதரர்கள், பட்டுகோட்டை SDPI  மற்றும் கரம்பக்குடி SDPI யினரும்  காவல்துறை துணையோடு அங்கு சென்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பிறகு காவல்துறை பாதுகாப்புடன் ஹஜ் பெருநாள் தொழுகை நடை பெற்றுள்ளது.  

இரத்தம் கொடுக்க இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும்: சாகுல் ஹமீது(வீடியோ)


அதிராம்பட்டினத்தை சேர்ந்த  நகர முஸ்லிம் லீக் இளைஞர் அணி தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் கடந்த 12 வருடங்களாக 23 தடைவக்குமேல் இரத்த தானம்  செய்து பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தனது இளமை காலம் தொட்டே சமுக சேவையாற்றி வரும் இவர் அவசர காலத்தில் இரத்தம் கொடுப்போரில் முதன்மை வகிக்கிறார் .

இன்றைய அவசர உலகில் நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம். அதுபோல் சமிபத்தில் ஊரெங்கும் பரவும் டெங்கு போன்ற கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து  மீள மருத்துவர்கள் இரத்தம் ஏற்ற சொல்லுகிறார்கள். 


அந்த நேரத்தில் யார் எவர் என்று  கூட பாராமல் இந்த சேவையை செய்ய இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும் இதனால் அனாவாசிய உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று கூறினார். 




இதற்க்கான குறைந்த அளவே இரத்தம் உறிஞ்சப்பட்டு நோயாளிக்கு ஏற்றபடுகிறது இரத்தம் கொடுத்தவரும் புத்துணர்வு பெற்று கொள்வார் என்பதில் எல்முனையளவும் சந்தேகம் இல்லை .

அதிரை வாசிகளின் தியாக திருநாள் நல் வாழ்த்துக்கள்! (வீடியோ)


அஸ்ஸலாமு அழைக்கும் அதிரை தண்டர் வாசகர்களுக்கு தியாக திருநாள் நல் வாழ்த்துக்கள். நமதூர் முக்கிய பிரமுகர்கள், காவல் துறை ஆய்வாளர் மற்றும் பொதுமக்களின் தியாக திருநாள் வாழ்த்துக்கள் இதோ!!!



தியாக திருநாளில் தியாகங்கள் செய்திட தயாராவோம் : எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவரின் பெருநாள் வாழ்த்து செய்தி



எஸ்.டி.பி.ஐ கட்சி யின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இதயம் நிறைந்த தியாக திரு­­நாள் நல்வாழ்த்துக்கள்

நிறைந்த மகிழ்சியோடும், மிகுந்த சந்தோசத்தோடும் தியாக திருநாளாம் ”பக்ரீத்” பெருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு என் இதயம் நிறைந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைக்கட்டளையை ஏற்று, தள்ளாத வயதில் பெற்றெடுத்த தனையனையே தியாகம் செய்ய தயாரான, தியாகத்தின் அடையாளமாய் திகழ்ந்த இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் திருநாளே ”பக்ரீத்” பெருநாள்.

சமுதாய முன்னேற்றதிற்காகவும் நம் நாட்டு மக்களின் நலனுக்காகவும் தியாகங்களும், அற்பணிப்புகளும் தேவைப்படுகிற இக்கால கட்டத்தில் இப்ராஹிம் நபி அவர்களின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி தியாகங்கள் பல செய்திட தயாராவோம். இவ்வாறு அவர் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

Friday, October 26, 2012

துபாய் - AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு – 2012



காணொளி மற்றும் புகைப்படங்கள் விரைவில்...

ஹஜ் பெருநாளன்று மின்தடை கூடாது - அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!


எதிர்வரும் தியாக திருநாளை முன்னிட்டு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அதிரையில் மின் தடை செய்யக்கூடாது என அதிரை நகர பாப்புலர் ப்ரண்ட் சார்பில் நேற்று நமதூர் மின்சாரவாரிய அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. 

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு இருந்து வந்தாலும் பண்டிகை காலங்களில் ஒரு நாள் மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்குவது வழக்கம். சமீபத்தில் நடந்த ஆயுத பூஜை அன்று கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. அதிகரித்துள்ள மின்பற்றாக்குறையை காரணம் காட்டி வரும் ஹஜ் பெருநாள் அன்று மின் சப்ளையை நிறுத்த உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, நமதூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிருவாகிகள் அதிரை மின்சார வாரிய் அதிகாரிகளை நேரில் சந்தித்து வெள்ளிக்கிழமை ஜும்'ஆ நேரத்திலும்  ஹஜ் பெருநாளன்றும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என  வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
கடந்த வருடங்களில் பெருநாள் அன்று அதிரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டதும் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை போன்ற  பண்டிகை நாட்களில் மின் தடை செய்யப்படாதததும் குறிப்பிடதக்கது.

தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி


சமூக அவலம் களைய உறுதி ஏற்போம். தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி:

‘‘தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத்தின் மேண்மையைப் பறைசாற்றும் தினமாகும். சமூக அவலங்களான வன்முறை, வறுமை, சுற்றுச்சூழல், சீர்கேடு, லஞ்ச ஊழல் முறைகேடுகள், மக்களின் ஜீவாதார உரிமைகளை ஆதிக்க சக்திகள் தடுத்தல் உள்ளிட்ட உலகளாவிய தீமைகளை, சமூக அவலங்களைக் களைய நாம் தியாகம் செய்யத் தயாராவோம்.

விட்டுக் கொடுத்தல், தம்மிடம் உரியமை இல்லாதார்க்கு வழங்குதல், உரிமைகளை அறத்தின் வழிநின்று போராடுதல் என்ற அம்சங்களை வீடுதோறும் பரப்பி மானுட சமூகம் மேம்பட அனைவரும் ஒருங்கிணைவோம்’’

பாமனில் SDPI கட்சி மற்றும் கில்கால் ட்ரஸ்ட் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்.

     இராமநாதபுரம் மாவட்டம் பாமனில் SDPI கட்சி மற்றும் கில்கால் ட்ரஸ்ட் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்.
மக்கள் இன்று டென்கு மற்றும் பல்வேறு மர்ம காய்ச்சலால் உயிரிழந்து வருகின்றனர் ,இதனால் மக்களின் அச்சத்தை போக்கவும் மக்கள் இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதனை தெளிவு படுத்தி கொள்ளவும் SDPI மற்றும் கில்கால் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
இதில் பாமனை சேர்ந்த மக்கள் அதிகமாக கலந்து கொண்டு பயனடைந்தனர்

பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி


தியாகத் திருநாள் சிந்தனை தேச முன்னேற்றத்திற்கு களம் அமைக்கட்டும் ! பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி 

மனித சஞ்சாரமற்ற மலைக்குன்றின் அடிவாரப் பாலைவனத்தில் இறைவனின் கட்டளைக்கு இணங்க தன் குடும்பத்தை தனித்து விட்டுச் சென்று புனித மக்காவில் மனித வாழ்க்கையின் விதையைத் தூவியவர். பகுத்தறிவிற்கு ஒவ்வாத நம்பிக்கைகள் மூலம் மக்களை அடிமைப்படுத்திய இராஜ்ஜியங்களுக்கு எதிரான போராட்டத்தை உலகில் தோற்றுவித்தவர். அவர் தாம் தியாகத்தின் திருவுருமாம் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் .

நீண்ட கால ஏக்கத்திற்கு பின் தான் பெற்றெடுத்த அருமை மகனாம் இஸ்மாயீல்(அலை) அவர்களை தனது வயோதிகப் பருவத்திலும் இறைவனின் கட்டளையை ஏற்று தியாகம் செய்ய முன்வந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை இந்நாளில் நினைவு கூறும் பொருட்டே " ஈதுல் அழ்ஹா " என்ற தியாகத் திருநாள் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களால் பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

தன்னுடைய வாழ்க்கையையே இயக்கமாக பரிணமித்து வாழ்வில் சந்தித்த சோதனைகளை , அதில் நேர்ந்த கடுமையான அனுபவங்களை தனது கொள்கைப் பாதையில் கஷ்டமாகவோ, தடையாகவோ, பாரமாகவோ கருதாமல் இன்முகத்துடன் அவற்றை எதிர்கொண்டு முன்னேறுவதுதான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு இவ்வுலக மக்களுக்கு சொல்லும் செய்தியாகும்.

நமது நாடு சர்வதேச அளவில் முன்னேறி வரும் இந்தத் தருணத்தில் அதற்கு தடையாக நிற்கும் பாசிசம் , தீவிரவாதம், ஏகாதிபத்தியம், இலஞ்சம், ஊழல், பாரபட்சம், ஒடுக்கப்பட்ட மக்களை வேட்டையாடும் போக்கு இவைகளுக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்களை தியாகத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்துச் செல்வோம் .

நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாகிய நாம் ஒன்றிணைவோம் ; உறுதியோடு முன்னேறுவோம் !

அனைவருக்கும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக நெஞ்சம் நிறைந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, October 25, 2012

ததஜ அதிரை கிளையின் ஹஜ் பெருநாள் தொழுகை அறிவிப்பு!


அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இந்த வருட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை வழமை போல தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள NMS  ஜெகபர் அலி மைதானத்தில் 27.10.12 சனிக்கிழமை  காலை 7.30 மணியளவில்  நடைபெறும்

மேலும் இப்போது மழைகாலமாக இருப்பதால் அன்றைய தினம் மழையாக இருந்தாலோ அல்லது தண்ணீர் தேங்கி நின்றாலோ லாவண்யா திருமண மண்டபத்தில் தொழுகை நடைபெறும்

அதுசமயம் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி  அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.

தகவல்: அப்துல் ஜப்பார்

6 நாள் போலீஸ் காவல் முடிந்தது- அதிரை தமீம் அன்சாரி மீண்டும் சிறையில் அடைப்பு


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 35). வெலிங்டன் ராணுவ முகாம், விசாகப்பட்டினம் கடற்படை தளம் உள்பட முக்கிய ராணுவ தளங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அவற்றை சி.டி.யாக தயாரித்து இலங்கை தூதரகத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி மூலம் கடத்த முயன்றதாக கடந்த செப்டம்பர் 18-ந்தேதி திருச்சி கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 


திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமீம் அன்சாரியை கியூ பிரிவு போலீசார் முதலில் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது தஞ்சையில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றினர். 



இதனை தொடர்ந்து அவரை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வேல்முருகன், தமீம் அன்சாரியிடம் போலீசார் அக்டோபர் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி விட்டு 24-ந்தேதி காலை 10 மணிக்கு திருச்சி ஜே.எம்-2 கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தவேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். 



கியூ பிரிவு போலீசார் கடந்த 18-ந்தேதி திருச்சி மத்திய சிறைக்கு சென்று கோர்ட்டு உத்தரவை காட்டி தமீம் அன் சாரியை வெளியே எடுத்து வந்தனர். 6 நாட்கள் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 



இந்திய ராணுவ ரகசியங்களை கடத்தியது தொடர்பாக தமீம்அன்சாரியிடம் இருந்து பல முக்கிய தகவல்களை சேகரித்து உள்ளதாக கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர். 



இதையடுத்து ஒரு நாள் முன்னதாகவே 23-ந்தேதி ஜே.எம்.-2 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ராஜாராமன் முன்னிலையில் கியூ பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் தமீம்அன்சாரியை அன்றே திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? - கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம்




கர்நாடகா : பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகா மாநிலம் குல்பர்காவின் தேசிய கல்லூரியில் 19.10.2012 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் ஷாஹித் நஸீர்  வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநில துணை தலைவர் அப்துல் வாஹித் சேட் தலைமை உரை ஆற்றினார். அவர் தனது உரையில் " சிறுபான்மை மற்றும் ஏழை மக்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் போராடி வருவதால் அது குறிவைக்கப்படுகிறது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிமியின் மறு வடிவம் என்று கூறுபவர்கள் ஒரு விஷயத்தை சிந்திக்க மறந்து விட்டார்கள்.2001ல் தடை செய்யப்பட்ட சிமியின் மறுவடிவாக 1993ல் உருவாக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எவ்வாறு இருக்க முடியும்? "என்று குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து சமதா செய்நிக் தால் அமைப்பின் மாநில தலைவர் வெங்கடசாமி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் " சில வகுப்புவாத சக்திகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்ய முற்படுகின்றன.ஆனால் பெரும்பான்மை சமூகமாக திகழும் முஸ்லிம்களும் தலித்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகள் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர்.இத்தகைய பிரச்சாரங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செவி சாய்க்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டார்.

பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மௌலானா கலீமுல்லாஹ் சித்தீக்கி சிறப்புரையாற்றினார்;.அவர் தனது உரையில் " சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து இந்தியா;களின் சம உரிமைகளுக்காகவும் முஸ்லிம்களை சக்திபடுத்துவதற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகளையும் இதற்கு முன்னர் நடத்திய பிரச்சாரங்களையும் அவர் பட்டியலிட்டார்.சட்டவிரோத நடவடிக்கைகளில் இதுவரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஈடுபட்டது கிடையாது இனியும் ஈடுபடபோவதில்லை.நாம் சட்டத்தை மதிப்பவர்கள். சுதந்திர தின அணிவகுப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு மறுத்தவுடன் அதனை ஏற்று கொண்டோம்.இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து பல பொருட்செலவுகள் செய்த போதும் நாம் நீதிமன்ற உத்தரவை ஏற்றுகொண்டோம்.ஐஎஸ்ஐயுடன் கூட்டு சேர்ந்து  சங்பரிவார் கும்பல் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதாக "  குற்றம்சாட்டினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், எஸ்டிபிஐ நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

Why popular FrontWhy popular FrontWhy popular Front

பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? சம நீதி மாநாடு - கேரளா மாநிலம் கொச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்



கேரளா : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேரளா மாநிலம் கொச்சியில் 18.10 .2012 அன்று நடத்திய சம நீதி மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை குறித்து அவதொர்று பரப்புபவர்களுக்கு இம்மக்கள் வெள்ளம் தகுந்ததொரு பாடமாக அமைந்தது. மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் எந்தவொரு இயக்கத்தையும் தவறான பிரச்சாரங்கள் மூலம் தடுத்து விட முடியாது என்பதை இம்மாநாடு தெளிவுப்படுத்தியது. தேச விரோத சக்திகளுக்கு தகுந்ததொரு எச்சரிக்கையையும் இம்மாநாடு விடுத்துள்ளது. 

மாநாடு நடைபெற்ற மெரைன் டிரைவ் பகுதிக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே நிரம்பி வழிந்தது. இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்த பொழுதும் எவ்வித வாகன நெரிசலும் ஏற்படா வண்ணம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தொண்டர்கள் காவல்துறையினர் வெகுவாக பாராட்டும் வகையில் திறமையாக பணியாற்றினார். இது போன்ற மக்கள் வெள்ளத்தை இதற்கு முன்னர் மெரைன் டிரைவ் கண்டதில்லை என்று அப்பகுதி வியாபாரிகளும் வாகன ஓட்டுனர்களும் தெரிவித்தனர்.

EM

மாநாடு மாலை 4 .30 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் தொடங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்திய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் அவர்கள் " பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை கடைபிடிக்கும் என்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாடுபடும் என்றார். சமநீதி என்பது இம்மாநாட்டிற்கான தலைப்பு மட்டுமல்ல என்றும் இயக்கம் ஆரம்பித்த நாளிலிருந்தே இதனை வலியுறுத்தி வருகின்றோம் என்றார். நீதி மற்றும் சமத்துவத்தை நமது அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. ஜனநாயகம் என்பது அனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்தையும் , மதச்சார்பின்மை என்பது இம்மாதத்தின் மீதும் பாரபட்சம் காட்டாமல் இருப்பதையும் குறிக்கும். அதிகாரத்திற்கு வருபவர்கள் இக்கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வருபவர்கள் இந்த அடிப்படைகளை புறம் தள்ளுகின்றனர். அத்துடன் ஒதுக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் மேலும் ஒதுக்குகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு பெற்று சக்தி பெறுவது தான் இதற்கான தீர்வு.

முஸ்லிம்கள் தங்களுக்கான உரிய பிரதிநித்துவத்தை சிறைச்சாலைகளில் மட்டும் தான் பெறுகின்றனர். 25 % உள்ள முஸ்லிம்கள் சிறைகளில் 37 % உள்ளனர். இவர்களில் 70 % விசாரணை கைதிகள் என்பது இன்னும் அதிர்ச்சியை அளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் செயல்பட்டு வரும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா குறித்து பரப்பப்பட்டு வரும் அவதூறுகளை மக்கள் ஏற்கவில்லை என்பதை தான் இங்கு திரண்டுள்ள மக்கள் வெள்ளம் உணர்த்துகிறது. பல்வேறு துறைகளிலும் ஒதுக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தை சக்திப்படுத்துவதர்காக போராடி வரும் நவீன சமூக இயக்கம் தான் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா. பாதுகாப்பற்ற உதவியற்ற நிலையில் உள்ள முஸ்லிம் சமூகத்தை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்பாடுகள் பாதுகாக்கும் என்றும் " அவர் குறிப்பிட்டார்.

Baselios Mar Thoma Yakob I Catholica Bava

பின்னர் பேசிய கத்தோலிக்க பாதிரியார் அவர்கள் தனது உரையில் " ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக போராடி வரும் இயக்கங்களுக்கு அரசாங்கம் தீவிரவாத முத்திரை குத்தி அவற்றை ஒடுக்குவதாக தெரிவித்தார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்று நான் முடிவெடுத்தவுடன் என்னுடைய முடிவை மாற்றுமாறு சர்ச் நிர்வாகிகளும் ஊடகங்களும் என்னை வற்புறுத்தின இருந்த போதும் மாநாட்டில் கலந்து கொள்வது என்று நான் முடிவெடுத்தேன். சமநீதி என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் துயர் துடைக்க யாரேனும் வருவார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஒரு விடிவெள்ளியாக உதித்திருக்கிறது " என்று குறிபிட்டார்.

சமநீதிக்கான போராட்டத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் மாநாட்டில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் களைந்து சென்றனர். கேரளாவில் இது போன்று சமநீதி மாநாடுகள் அக்டோபர் 30 அன்று கோழிக்கோட்டிலும், நவம்பர் 4 அன்று திருவனந்தபுரத்திலும் நடைபெற இருக்கிறது

அதிரைக்கு வந்தது குர்பானிக்கான ஒட்டகங்கள்! புகைப்படம் உங்களுக்காக...



இந்த வருடமும் அதிரை தமுமுகவின் சார்பில் ஒட்டகம் கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எராளமானவர்கள் கூட்டு சேர்ந்து வருகின்ற தியாக திருநாளன்று இறைவனுக்காக ஒட்டகத்தை அறுத்து பலியிட உள்ளனர் அதற்க்கான ஒட்டகங்கள் நேற்று அதிரைக்கு வந்து சேர்ந்தன. இதனை ஏராளமான சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர். இன்னும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் அதிரையில் இப்போதே களைகட்ட துவங்கிவிட்டது.

புகைப்படம்: அதிரை சாலிஹ்