3 Apr 2013
புதுடெல்லி:இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட சங்க்பரிவார தலைவர்களுக்கு எதிரான சதித்திட்டம் தீட்டிய குற்றத்தை ரத்துச் செய்த அலஹபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்வதில் தாமதம் ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து விளக்கமாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூத்த சட்ட அதிகாரி அரசுக்காக பிரமாணப்பத்திரம் சமர்ப்பிக்கவேண்டும் என்று நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. இதற்காக சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் 2 வார கால அவகாசம் அளித்துள்ளது. சட்ட அதிகாரிகள் தாம் மேல் முறையீடுச்செய்வதை தாமதப்படுத்தினர் என்று சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து சட்ட அதிகாரியின் பிரமாணப்பத்திரத்தை உச்சநீதிமன்ற பெஞ்ச் கோரியது.
அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் எல்.கே.அத்வானிக்கு எதிரான மேல்முறையீட்டுக்கு 167 நாள்கள் காலதாமதமாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன? மேல் முறையீடு செய்வதில் என்ன சிக்கல் என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதற்கு மனுவை மேல்முறையீடு செய்வதில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோரின் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது என்று சி.பி.ஐ. சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தாமதத்துக்கான காரணங்களை விளக்கும் உறுதிமொழிப் பத்திரத்தை அரசின் மூத்த சட்ட அதிகாரி ஒருவரிடமிருந்து பெற்று இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
கடந்த 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாபரி மஸ்ஜிதை சங்க்பரிவார தீவிரவாதிகள் இடித்துத் தள்ளினர். இது தொடர்பான வழக்கில் எல்.கே. அத்வானி உள்பட பல தலைவர்கள் மீது வழக்கு ஒன்று அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட எல்.கே. அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கட்டியார், முரளி மனோகர் ஜோஷி, சதீஷ் பிரதான், சி.ஆர்.பன்சால், அசோக் சிங்கால் உள்ளிட்ட பலர் அந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ தாமதமாக மேல்முறையீடுச் செய்தது. இந்த மனு மீதுதான் நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் நேற்று(செவ்வாய்க்கிழமை) விசாரணை நடத்தியது
0 comments:
Post a Comment