3 Apr 2013
புதுடெல்லி:கஷ்மீர் அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மனுச் செய்து அரசின் அனுமதி பெற்ற பிறகு பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தவர் ஹிஸ்புல் முஜாஹிதீனின் முன்னாள் கமாண்டர் லியாகத் அலி ஷா. இவரை டெல்லி ஸ்பெஷல் போலீஸ் அநியாயமாக டெல்லியை தகர்க்க வந்த தீவிரவாதி என்று பொய் கூறி கைது செய்தது. ஆனால் அவர் தாக்குதல் நடத்த வரவில்லை, மாநில அரசின் மறுவாழ்வு கொள்கையின்படி சரணடைவதற்காக வந்தார் என கஷ்மீர் மாநில போலீசார் கூறினர். இதனால் டெல்லி போலீசுக்கும், அவர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்தது.
இதற்கிடையே லியாகத் ஷா கைது பிரச்னை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் எஸ்.எஸ்.பி. துணைராணுவப்படை சார்பில் டெல்லியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறியதாவது: லியாகத் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரில் இருந்து சரண் அடைய வந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விடுதலை செய்யப்படுவார்.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. லியாகத் ஷா சரண் அடைய வந்தாரா அல்லது வேறு எதற்காவது வந்தாரா என்பது இவ்விசாரணையின் முடிவில் தெரியவரும். அவர் உண்மையாக சரண் அடைய வந்திருந்தால் உடனே விடுவிக்கப்படுவார். அவர் கைது செய்யப்பட்டதற்கான சூழ்நிலை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் என்றார்.
இதனிடையே லியாகத் அலி ஷாவிடம் விசாரிக்க அனுமதிகோரி டெல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் 30-ம் தேதி வரை அவரிடம் விசாரணை நடத்த என்ஐஏ-வுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment