Tuesday, April 2, 2013

ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவியர் அமைப்பு ஜிஹாதை தூண்டுகிறது! – புலனாய்வுத்துறை அதிகாரியின் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை!

                      2 Apr 2013 GIO training girls for jihad- Mumbai Police circular
 
     மும்பை:ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் மாணவியர் அமைப்பான Girls Islamic Organisation(GI0) மாணவியர்களை மூளைச் சலவைச் செய்து ஜிஹாதிற்கு தூண்டுவதாக மும்பை போலீஸின் உளவுத்துறை அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அவதூறான சுற்றறிக்கைக்கு மன்னிப்புக்கோராவிட்டால் மும்பை போலீஸ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.
 
     மும்பை போலீஸின் உளவுத்துறை அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது: ஜமாஅத்தே இஸ்லாமியின் GIO மாணவியர் அமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றாகும். இவ்வமைப்பு மஹராஷ்ட்ரா மாநிலத்தில் 40 உயர் பள்ளிக்கூடங்களையும், 3 ஜூனியர் கல்லூரிகளையும் நடத்தி வருகிறது. இவ்வமைப்பின் நோக்கம் கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவியர்களை மூளைச் சலவைச் செய்து அவர்களை ஜிஹாதிற்கு தூண்டுவதாகும். இவ்வமைப்பு ஜமாஅத்தே இஸ்லாமியுடன் தொடர்புடைய அமைப்பாகும். இது கேரளாவில் துவக்கப்பட்டது. இவ்வமைப்பின் நோக்கம், அதிகமான முஸ்லிம் பெண்களுக்கு அவர்களது மார்க்கத்தையும், திருக்குர்ஆனையும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். ஆனால், அவ்வமைப்பின் உண்மையான நோக்கம் கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவியரை மூளைச் சலவைச் செய்து அவர்களை ஜிஹாதிற்கு பயிற்சி அளிப்பதாகும்’ என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை கடந்த மாதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
     ஜமாஅத்தே இஸ்லாமியின் மஹராஷ்ட்ரா மாநில செய்தி தொடர்பாளர் இதுக் குறித்து கூறுகையில், ‘காவல்துறை இதுக்குறித்து மன்னிப்புக் கோராவிட்டால் சட்டரீதியான வழக்கு தொடரப்படும். சமூக-மார்க்க அமைப்பின் இமேஜை சீர்குலைப்பதே இந்த சுற்றறிக்கையின் நோக்கம்’ என்றார்.
 
      மும்பை போலீஸின் செய்தி தொடர்பாளர் சத்யநாராயண சவுத்ரி இதுக்குறித்து கூறுகையில், ‘இந்த சுற்றறிக்கை துறை சார்ந்தது. பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை’ என்றார்.
 
      இதற்கு முன்னர் மும்பை ஆஸாத் மைதானில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா பாட்டீல் என்பவர் சம்வாத் என்ற போலீஸ் அதிகாரிகளுக்கான ’சம்வாத்’ பத்திரிகையில் எழுதிய கவிதையில் முஸ்லிம்களை, பாம்புகள், தேசத்துரோகிகள், அவர்களின் கைகளை வெட்டவேண்டும் என்று வர்ணித்திருந்தார். முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து சுஜாதா பாட்டீல் சம்வாதின் அடுத்த இதழில் மன்னிப்புக் கோரினார்

0 comments:

Post a Comment