Tuesday, April 2, 2013

விசாலமான அரசியல் கூட்டணி தேவை! – எஸ்.டி.பி.ஐ

                    2 Apr 2013 sdpi
 
     கோவை:நாட்டின் சமூக-பொருளாதார சூழலில் ஏற்பட்ட அடிப்படையான மாற்றங்களுக்கு ஏற்றவாறு விசாலமான அரசியல் கூட்டணி தேவை என்று கோவையில் நடைபெற்ற சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
      மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:செழிப்பான தேசம் என்ற கொள்கையை காங்கிரஸ் தலைமையிலான அரசு கைவிட்டதை தொடர்ந்து நாட்டில் வறுமை படிப்படியாக அதிகரித்து வருகிறது. புதிய முதலாளிகள் இயற்கை வளங்களையும், நிலங்களையும் பெருமளவில் சுரண்டுகிறார்கள். சாதாரண மக்களை அடக்கி ஒடுக்கி, விவசாய நிலங்களை அழித்து அவர்களை நகரத்தின் சேரிகளில் தள்ளும் இந்த வளர்ச்சியை தடுப்பதில் இடதுசாரிகள் உள்ளிட்ட பாரம்பரிய அரசியல் கட்சிகள் தோல்வியை தழுவியுள்ளன. அதேவேளையில் பல பகுதிகளிலும் அடிப்படையில்லாத வளர்ச்சி கொள்கைக்கு எதிராக எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.நிலங்களை விநியோகிப்பது, இயற்கையை பாதுகாப்பது, விவசாயநிலங்களை கைப்பற்றுவதற்கு எதிராகவும் உள்ளூர் அளவில் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.
 
    சிறுபான்மையினர், தலித் மக்களின் முழுமையான சக்திப்படுத்துதலுக்காக பாடுபடும் நவீன சமூக இயக்கங்களின் செயல்பாடுகளை காணமுடியவில்லை. இத்தகைய பன்முக சக்திகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் விசாலமான கூட்டணியை உருவாக்கவும், மாற்றும் வளர்ச்சியும், அரசியல் பிரதிநிதித்துவமும் பெறுவதற்கு எஸ்.டி.பி.ஐ முன்வரும்.
 
     தமிழ் இன மக்களை இனப்படுகொலைச் செய்யும் இலங்கை ஆட்சியாளர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரணை நடத்தவேண்டும். இலங்கையை பாதுகாக்க முயலும் இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானம் கண்டித்தது.
 
     சுதேசிமயமாக்கல் மூலம் சவூதி அரேபியாவில் நெருக்கடியை சந்திக்கும் இந்தியர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்திய அரசு அவசரமாக தலையிடவேண்டும்.
 
     நாட்டில் சமூக நீதியும், பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமாக விவசாய நிலங்களை அதன் உண்மையான உரிமையாளர்களுக்கு அளிக்கவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் கைவசம் வைத்திருக்கும் நிலத்திற்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிகமான நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளுக்கும், நிலமில்லாதவர்களுக்கும் விநியோகிக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.
 
    இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களை விட பிற்பட்ட நிலையில் இருக்கும் முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திற்கு கொண்டுவர இடஒதுக்கீட்டை ஆக்கப்பூர்வமாக அமல்படுத்துதல், வகுப்புவாத கலவரம் தடுப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தல், கறுப்புச் சட்டங்களான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தையும், சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தையும் வாபஸ் பெறுதல் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

0 comments:

Post a Comment