Sunday, December 9, 2012

அணுமின் நிலையம்:ஆந்திராவில் மக்கள் எதிர்ப்பு!

 
    ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அணுமின் நிலைய திட்ட எதிர்ப்பாளர்களில் மத்திய எரிசக்தி துறையின் முன்னாள் செயலர் ஈ.ஏ.எஸ். சர்மாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுமின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ரனஸ்தலம் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது.
 
    இதுபற்றி சர்மா அளித்த பேட்டியில், ” ஜெர்மனி போன்ற நாடுகள் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைக்கு மாறியுள்ளன. எனவே,ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய, அணுமின் நிலைய திட்டத்தை முழுவதுமாக மறுஆய்வு செய்ய வேண்டுமென அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
 
    ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், கொவாடா கிராமத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 6 அணு உலைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ராமச்சந்திரபுரம், குடேம், கோட்டப்பாலம், தெக்காலி, கொவாடா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1,983 குடும்பங்களைச் சேர்ந்த 7,960 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, மாற்று இடத்தில் குடியமர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

           

0 comments:

Post a Comment